Sri Ramaprabhakaran

குரல் வடிவம் : அனுராதா சந்த்ரமௌலி
இசை வடிவம் : கிரிகேஷ்கர்

———–

ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்ரம்
பரமபாவன : ஸ்ரீ அப்பண்ணாச்சார்யார்

ஸ்துதி
பூஜைக்குரிய ராகவேந்திரர்
சத்திய தர்ம ரதங்களுடையவர்
பஜிக்கின்றோம் எம் கல்பகத் தருவே
காமதேனுவே நமஸ்காரம்


தமிழில்
அருள்: ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்

எழுதுகோல்
வேலூர் இராம . பிரபாகரன்

நூன்முகம்
அன்புடையீர்,
நலம் பல. ஸ்ரீ குரு ராஜர் தன்னருளால் இன்று ஸ்ரீ அப்பண்ணாச்சாரியார் அருளிய “ஸ்ரீ பூர்ண போத” எனத் துவங்கும், “ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்” தமிழில் சீரிய முறையில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
சமஸ்கிருத மொழி உச்சரிப்பில் தவறு நேர்கின்ற போது மந்த்ரஹீனம் ஏற்படுகிறதே என வருந்தும் மொழியறியா தூய பக்தர்களுக்காகவே முறையான தமிழில், தெளிவான முறையில், அழகான வடிவோடு, இன்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் வெளிவருகிறது.

இந்த முயற்சிக்கு முழு முதற் காரணம் பிரதி வியாழக்கிழமை தோறும், ஜெயா ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பான “ஸ்ரீ ராகவேந்திர விஜயம்” தொடரின் இயக்குனர் திரு. D MAG. சரவணன் அவர்களே.
இவர் காட்டிய வற்றாத ஆர்வமே இந்த நூல் உருப்பெறக் காரணமாய் அமைந்தது. பல்வேறு இடங்கட்கு, படப்பிடிப்புக்காகச் செல்லும் போது, பல துறைகளைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திர பக்தர்கள், அவரிடம் விடுத்த வேண்டுகோள், அவருடைய அயரா உழைப்பின் காரணமாக வடிவம் பெற்றது.


ஸ்லோகங்கள் வரி பிறழாமல் செம்மையாக இருப்பினும் பக்தி பிரிப்பதில் நூலுக்கு நூல் எண்ணிக்கை வேறுபடுகிறது. சில பிரதிகளில் 32 பத்தி எனவும் சிலவற்றில் 33 எனவும், சில 35 சில 36 எனக் காணப்படுகின்றன. எனவே பக்தர்கள் பத்திகளின் எண்ணிக்கை குறித்துக் கவலைப் படவேண்டாம். மூல ஸ்லோகத்தின் வரி வடிவம் ஒரு எழுத்துக் கூட மாறவில்லை என்பதே சிறப்பு. அநு ராகவேந்திர ஸ்தோத்திரத்தின் முதலிரு வரிகளான “பூஜ்யாய ராகவேந்திராய” என்ற இரு வரிகள் மட்டுமே ஸ்ரீ அப்பண்ணாச்சாரியாருடையவை. அடுத்து வருபவை ஸ்ரீ யோகீந்த்ர தீர்த்தர் அவர்களால் எழுதப்பட்டவை எனவும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. 


எனவே ஸ்ரீ அப்பண்ணாச்சாரியாரால் அருளப்பட்ட ஸ்லோகங்களின் தமிழ் வடிவை ஒரு பகுதியாகவும், ஸ்ரீ குருயோகீந்த்ர தீர்த்தர் அருளிய “துர்வாதி” எனத் துவங்கும் பாடலின் தமிழ் வடிவை அடுத்தும் சேர்த்துத் தந்துள்ளோம்.

இரு பெரும் மஹான்களின் ஸ்தோத்திர வடிவில் நமக்கு அருளிய வரமே இந்த துதி மனதாரத் துதிப்போம். அன்புடன் துதிப்போம். பொருள் உணர்ந்து துதிப்போம். ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிகள் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

அன்புடன் : இராம. பிரபாகரன், வேலூர்

குறிப்பு : ஜகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர் திரைப்பட நடிகர் திரு.B.R.இளவரசன் அவர்கள் ஸ்தாபகராக சேவையாற்றும் தேனீ, அகமலை சமத்வ ராயர் ஆலய சன்னதியில் 2019 பங்குனி உத்ர திருநாள் வைபவத்தில் மறுபதிப்பு வெளியிடப்பட்டது.

காப்பு
அலையாலும் கங்கைநிகர் அழகான துங்கை நதி
அருகாளும் மாஞ்சாலியே
அமுதான தமிழோடு அருள்ராஜர் புகழ்பாட
அருள்வாய் எம் பூஞ்சோலையே
கலையாளும் விதியாளும் அருளோடு எமையாளும்
வனதேவி மாஞ்சாலியே
கருணைமொழி குருராஜர் துதிபாட துணையாக
காப்புனது அடிமாலையே

அடக்கம்
குருவடிகள் திருவடிகள் அருளடிகள்
முடியதனில் கொண்டதாலே
உருகுமன மதனிலெழு குருராஜர்
புகழ்பால் உகந்ததாலே
பருகுமொரு அமுதமென அருளதனில்
மனமுருகி நனைந்ததாலே
உருகுமொரு மனமோடு பெருகிவரும்
குரு துதிகள் உரைக்கின்றேனே

நூல்

ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஹரிபாத சம்பந்தம் பெற்ற அலை கங்கையதன்
அருள்திரையின் குளுமையாக
அரனவன் சிரமீது சந்த்ரபுதன் போலவே
அமைகின்ற இளைமையாக
சுரமாறு புலனைந்தின் ஸ்வயம்மாறி அமுதாக
சுகமான அருளதாக
வரமோங்கு ஸ்ரீராக வேந்திரகுரு வாக்காக
வருகங்கை எமைக்காக்கவே.

ஹரிபாத சம்பந்தம்…

ஆடுயானை முதலை அனைத்துமுரு உலகுபோல்
அமையுமொரு சூழலதுபோல்
கூடுமொரு வாழ்விதினில் ஒளியாக வழியாக
கூடுமானந்த தீர்த்தர்
நாடிதரு போதமே ராகவேந்திரர் தரும்
ஞானமாய் விளங்குமன்றோ
நாடுமன மேராக வேந்திரரின் வாக்கென்னும்
நல்கங்கை தூயதாக்கும்

காம க்ரோதம் லோப மோக மத மாச்சரிய
கொடுமைகளை அழிப்பதாக
ஞானமே புலனதாய் வைராக்ய சீலரும்
நீதியெனக் கொள்வதாலே
ஊனமுறு மனமோடு திரிவோரை விழிங்கிவிடும்
உறுதிகொள் திறமதாலே
நாமமே ஸ்ரீஹரி ஞானமே த்வைதமெனும்
நல் கங்கை தூயதாக்கும்.

ஸ்ரீ ஹரியும் ஜீவபர பேதமும் ஸ்ரீவிஷ்ணு
சகலபரி பூர்ணரென்னும்
மாறாத ஞானமும், சேராத மோனமும்
சத்ய தர்ம சாந்த நிலையும்
கூறாது கூறுநிலை குன்றாத வளமையதை
கூறுகுரு ராஜன் வாக்கு
பாராத பரமநிலை சேர்க்கட்டும் அடியேனை
பரிசுத்த மாக்கட்டுமே.

பாதபங் கஜம்தன்னில் பக்திகொண்டார்க் கென்றும்
பரிபூர்ண கருணைபுரிவார்
பார்வையால் பாவமதை அழிப்பவர் பூமியில்
இந்திரன் நிகரானவர்
வேதமாய்ப் பாதமதில் வேண்டுவார்க் கருள்தந்த
வேதமே உருவானவர்
நாதமாய் போதமாய் நாதாந்த ஜோதியெனும்
நல்ராக வேந்த்ரர் காக்க.

ஸ்ரீ ஹரிதன் சரணகமலம் தன்னில் நிலைபெற்று
ஸ்ரீ ஹரியின் அருளதாலே
சகல சௌபாக்யங்களும் பெற்றவர் தேவாம்ஸம்
பெற்றவர் நிகரற்றவர்
ஸ்ரீ கல்ப விருட்சத்தை யொத்தவர் அடியேனின்
சிறுவாழ்வில் ஒளியானவர்
நானுறு அபீஷ்டங்கள் நிறைவேற்றி நெஞ்சத்தில்
நிலையாகவே நின்றவர்.

மங்கள உருவானவர் கொண்ட சம்சார
சங்கடம் சுகமாக்கியே
பொங்கிடும் துயர்ப்பொதி பஞ்சுக்கு நெருப்பாகி
போதங்கள் அருளுவாரே
சங்கடம் நீக்கி சுக, தைரியம் இவையாவும்
இயல்பாகவே கொண்டவர்
தங்குபைசாச, முனி துஷ்டபேய் க்ரகங்களை
தடுத்து கரை சேர்ப்பிப்பவர்.

ஆசாதி தோஷங்கள் அற்றவர் பொலிவான
அருளதே உருவானவர்
பேசாது பேசியே பிரதிவாதம் மௌனமுற
பெருஞானத் திருவானவர்
ஆசாநிராசா களங்கங்கள் யாவையும்
அன்பினால் தான் வென்றவர்
காசாசையால் பிறவி கடக்காத பிறவிக்கும்
கருணைமொழியால் நின்றவர்.

சந்தான சம்பத்தும் ஹரிபக்தி வைராக்யம்
நல்வாக்கு சுகசரீரம்
சந்ததமும் நிலைபெற்ற ஞானமும் சேர்ப்பித்து
தேகத்து நோய் களெல்லாம்
முந்தியே வருதோஷம் நீங்கவும் அருள்தந்து
ரக்ஷிக்க குருராஜரே
சங்குகர்ணர் கொண்ட கருணைவடி வேராக
வேந்திரரே ரக்ஷிக்கவே.

அடையாத சுகிர்தங்கள் அடையவும், கங்கையதன்
புனிதமாய் புகழாகவும்
முடியாத மூவகைப் பாபங்கள் முடியவும்,
புத்ரச்சந் தானம் பெறவும்
கொடிதான அங்ககுறை நீங்கவும் குறைநீங்கி
அங்கங்கள் பொலிவு பெறவும்
மடியுபேய் பிசாசாதி நீங்கபா தோதகம்
சரணடிகள் குருராஜனே.

பாதபங் கஜம்ருத்திகை அணியும் சுகதேக
பக்தர்கள் எவரெவர்களோ
பாதபங் கஜமகிமை அருள்தேனை பருகிமகிழ்
பாவனர் எவரெவர்களோ
பாதபங் கஜசரிதம் நாவாரச் சொல்லி மகிழ்
பரமபா வனரெவர்களோ
ஆதலால் அவர்களின் தரிசனம் எழுபிறவி
பாவமும் சாம்பலாக்கும்.

ஞானம்நிறை பாத்திரம் மத்வமத சூத்திரம்
டிப்பணிக் கிவர்மாத்திரம்
மோன விஜயீந்திரரின் ஞானசுதீந்த்ரரின்
அருள்சேர்ந்த சத்பாத்திரம்.

ஞானமும் பக்தியும், ஆயுளும், கீர்த்தியும்
எனக்கருளும் ராகவேந்திரர்
ஆனபெயர் கொண்டவர் நிர்பயம் தந்தருளி
எனையாளும் குருராஜரே.

பிரதிவாதி கலைஜெயிப்ப தும்அவர்கள் உறுதியை
பலமாக வெற்றி பெறுதலும்
கரமாதி அங்கங்களால் கொண்ட கருணையை
கடல்போல் நிறை தருவதும்
பிரணவத்து ஞானமும் ச்ரவணத்து கானமும்
சேர்ந்தகலை வித்தைகளிலும்
வரமொத்த மெய்ஞ்ஞானி ஸ்ரீராக வேந்த்ரர்போல்
விளங்குவார் வேறில்லையே.

ஸ்ரீஹரி இதயத்தில் சர்வமும் பாதத்தில்
சந்தமே வடிவமாகி
ஸ்ரீமுக ஆசாதி தோஷங்கள் வென்றதால்
அருள்தரும் தாயுமாகி
பார்முகம் பார்த்தவர் விருப்பங்கள் எல்லாமும்
பரிவோடு நிறைவேற்றியே
ஊர்முகம் காப்பதில் ஸ்ரீராக வேந்த்ரர் போல்
ஒருவரும் இங்கில்லையே.

அடியார்கள் துயர்தன்னை நீக்குதற் காகவளர்
அபரிமித கருணையதுவும்
மிடிபோக்கும் இச்சையொடு நல்வாக்கு சுயமின்மை
மாறாத அடையாளமாய்
அடிதந்து காக்கவும் அடியோடு போக்கவும்
அமைவான வல்லமையதும்
முடிமீது நான்கொண்ட குருராகவேந்த்ரர் போல்
முதல்நாதன் வேறில்லையே.

அறிவின்மையும் மறதி விபரீத ஞானமும்
சந்தேக மாம்புத்தியும்
நெறியற்றதால் வந்த வலிப்பு, நோய், குஷ்டங்கள்
நடுக்கலால் திக்குவாயும்
அறிவற்று தாம்பெற்ற புலன்களின் நோய்களும்
அடுத்துவரும் கர்ம நோயும்
பொறிபட்ட பஞ்சதாய் ராகவேந்த்ரர் கருணை
புகழ்பட்டு மாய்ந்து போகும்.

அறிவின்மையும்…

அஷ்டாக்ஷரம் ஓம்ஸ்ரீ ராகவேந்திராய நம
அதுமந்தரம் த்யானத்தாலே
அஷ்டாக்ஷரம் நமோ நாராயணாயஓம்
அதுசொன்ன பலனுமாகும்
அஷ்டதிக் பரிபால னம்செய்யும் தேவதைகள்
அவருடன் நிலை பெற்றதால்
அஷ்டதிக் கும்புகழும் பெறும்பலன்கள் சேர்ந்திடும்
அதிலேதும் ஐயமில்லை.

தன்வினை பிறவினை யால்வந்த துன்பங்கள்
தன்தேக கெடுதல்களும்
தன்னையே வென்றகுரு ஸ்ரீராகவேந்திரரின்
தண்கருணை போக்கட்டுமே
தர்மார்த்த காம்யமோஷநான்குபுருஷர்த்தமும்
நாடியே சேரட்டுமே.

அனுதினம் மூவேளை யார்துதி செய்தாலும்
அவரெண்ணம் ஈடேறுமே
அகம் புறம் இகம் பரம் யாவற்றிலும் சுகம்
அடைவார்கள் ஐயமில்லை.

அறிவறிய வொண்ணாத சம்பூரணமாய் எதிலும்
ஆனமா மகிமையாகி
தெரிவறிய அற்புதங் கள்காட்டும் கருணையில்
தேவனாய் நிறைவானவர்
நெறியறிய ஸ்ரீமாத்வ சாகரம் தன்னிலே
நிலை நிற்கும் நிலவானவர்
தருகற்ப கம்போல மருவற்றவர் எம்மை
தயவோடு காத்தருள்க.

புண்ணியத் தலங்களின் யாத்திரை பலன்களை
அடையவோர் வழியைத்தேடி
விண்புகழ் ப்ருந்தா வனந்தன்னை வலம்வர
வந்தது சாயுஜ்யமே
புண்ணியத் தீர்த்தங்கள் நீராடும் பலன்தேடி
பொருந்தினேன் பிருந்தாவனம்
நண்ணினேன் அபிஷேக தீர்த்தத்தை தலைமீது
அணிந்து நான் பேறு பெற்றேன்.

நீதிக்கு மாறாத என்னாசை எல்லாமும்
நிறைவேற நமஸ்கரித்தேன்
பாதிக்கு மேல்வந்த பாவங்கள் விட்டோட
பிருந்தாவனம் பார்க்கிறேன்
ஆதிக்கும் எட்டாத சாத்திர ஞானங்கள்
அருளதாய் நான் சார்கிறேன்
சோதியாய் நீதியாய் சுடர் உங்கள் திருநாமம்
சொல்லி நான் கரைசேர்கிறேன்.

அடிகாண முடியாத சம்சார சாகரம்
அது தொடர் பாசபந்தம்
அடிமீள முடியாத தொடர் காமக்ரோதங்கள்
அலையாலே தொடரும் சொந்தம்
மிடி மீள முடியாத துயரங்கள், துன்பங்கள்
மீளவோ வழிகள் இல்லை
அடி சேர்கிறேன்ராக வேந்த்ரனே சத்குரு
அடியனைக் காத்தருள்வாய்.

அருளான ஸ்ரீராகவேந்திரர் ஸ்தோத்திரம்
அன்புடன் பக்தியுடனும்
குருசரணம் எண்ணியே சொல்லுவார் என்னாளும்
குன்றாத வளமைபெறுவார்
பெருகு நோய் தீர்ந்திடும் ஆரோக்கியம் பெருகிடும்
பெருநோய்கள் கூட மறையும்
திருநிறை ஸ்ரீராகவேந்திரர் திருவருளில்
திசைகளும் வெல்லுவாரே.

பலமுறை சொல்வதால் பார்வை வரும் செவிடனும்
பாடல்கள் நின்று கேட்பான்
குலமுறை பேசவும் கூடாத மூங்கையும்
கூடிநலம் பேசி மகிழ்வான்
சிலகுறை பெருபுலன்கள் சீராகி நீர்வழியில்
சென்றிடும் உலகு வெல்லும்
நிலைராக வேந்திரர் புகழ்பாடும் இத்துதிகள்
நிலையான புகழதாக்கும்.

ஒருமித்த மனதோடு இத்தோத்தி ரம்சொல்லி
அருட்தீர்த்தம் பருகுவோர்க்கு
கருதங்கும் வயிரோடு உதரசம் பந்தமுள
களங்கங்கள் நீங்கிவிடுமே.

கனிவான பணிவோடு கால்ஊன மானாலும்
கருத்தோடு பிருந்தாவனம்
அநுஸ்தோத்திரம் சொல்லி அன்பாக வலம்வந்து
அவன் நமஸ்காரம் செய்தால்
மணியான வாழ்வுவரும் மறுபடிநடக்க வரும்
மண்மீது புனிதனாக்கும்.

சந்திர கிரஹணமும், சூரிய கிரஹணமும்
ஞாயிறும், பூசமீனும்,
சந்தியாகாலமும், சேர்ஜென்ம நக்ஷத்ரம்
வைத்ருதி யோக நாளும்
சந்திர அமாவாசை, பௌர்ணமி, மகோதயம்
அர்த்தோதய சமயமும்
சிந்திக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்தோத்திரம்
நூற்றெட்டு முறைகள் சொன்னால்
வந்திக்கும் இவ்வுலகு பூத பைசாசங்கள்
வாராது விட்டு விலகும்.

ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத் தருகில்
ச்ரத்தையும் பக்தியோடும்
ஸ்ரீராக வேந்திரர் ஸ்தோத்திரம் சொல்லியே
தீபங்கள் ஏற்றிவைத்தால்
ஸ்ரீராக வேதமும் சாஸ்த்திர ஞானமும்
சத்புத்ர பேறும் சேரும்
ஸ்ரீராக வேந்திரர் ஸ்தோத்திரம் வாதிடும்
பேர்களை வெற்றி கொள்ளும்.

ஸ்ரீராக வேந்திரர்…

பரிசுத்த ஞானமும் பக்தியும் வைராக்ய
பாவமும் நிலையதாகும்
பரிவாளுமா என்ற ஐயமே வேண்டாம்நல்
பக்திக்கு இதுசாத்தியம்
பரிவோடு குருராஜர் கருணை காக்கும் அதே
பாக்கியம் ஐயமில்லை.

ஸ்ரீராக வேந்திர ஸ்தோத்ரஜப மகிமையால்
துயரங்கள் வருவதில்லை
அரசன், கள்வன் வேங்கை கடும்பாம்பு இவைகளால்
ஆபத்து நிகழ்வதில்லை.

ஸ்ரீராக வேந்திர…

எவரொருவர் தினந்தோறும் பக்தியுடன் குருராஜர்
இருபாதம் சிந்தை வைத்து
நவநிதியும் தருமிந்த ஸ்ரீராகவேந்திர
ஸ்தோத்திரம் சொல்லுவாரோ
அவருக்கு என்னாளும் துன்பமில்லை ஸ்ரீராம
ஸ்ரீஹரியின் அருளுண்டாகும்
தவசித்தி ஆசைகள் தரணிபுகழ் கீர்த்திகள்
தடையிலா செல்வம் வருமே
இவ்வருள் நிச்சயம் பெறுவர் எனும் உறுதிக்கு
ஹயக்ரீவர் சாட்சியாகும்
இதுநிலை பெயராது ஸ்ரீராகவேந்திர
ஸ்தோத்திர மாட்சியாகும்.

ஸ்ரீராகவேந்திரர் நல்லருள் துணையினில்
தோன்றிய புண்ய ஸ்தோத்ரம்
ஸ்ரீராக பக்தியும் ஞானமும், வைராக்யம்
நிறைந்திடும் சத்புருஷராம்
அப்பண்ணா சார்யரெனும் அடியவர் சுபமோடு
அருளிய ஸ்தோத்ரமாகும்
அனுதினம் சொல்வார்க்கு என்றென்றும் குறைவில்லை
அவரருட் காட்சியாகும்.

ஸ்ரீராகவேந்திரர்…

பூஜைக்குரிய ராகவேந்திரர்
சத்திய தர்ம ரதங்களுடையவர்
பஜிக்கின்றோம் எம் கல்பகத் தருவே
காமதேனுவே நமஸ்காரம்.

இருளுக்கும் தீமைக்கும் எதிரெழுசூரியன்
அருள்ஹரி பக்தர்கள் மனம்வாழ் நிலவு
மருள்அழி ஞானம், வற்றாக் கருணை
குரு ராகவேந்திர ப்ரபு நமஸ்காரம்.